முன்பு ஒரு பதிவில் மலைமாற்றுப் பதிகத்தை கொடுத்து அதன் பொருளைக் கேட்டு இருந்தோம். அதற்கு 'சிவயசிவ' வலைப்பூவின் ஆசிரியர்
உயர்திரு ஜானகிராமன்
அவர்கள்
அருள்கூர்ந்து விளக்கம் அளித்துள்ளார்கள்.
அவருக்கு அனுராதாவின் நன்றி. அனுராதா எல்லோருடமிருந்தும் தரமான கட்டுரைகள் ,கதைகள், கவிதைகள், நாடகங்களை எதிர் பார்க்கிறது.
=========================================================
''யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா பொலேமே
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ
நேணவரா விழயாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாய ரிளேதகவே யேழிசையாழவி ராவணனே
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா
வேரியுமேணவ காழியயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயழிகாவண மேயுரிவே
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயா தமிழாகரனே"
மேலே கண்டுள்ளது திருஞான சம்பந்த சுவாமிகள் எழுதிய மாலை மாற்றுப்
பதிகமாம்.
===========================================
உ
சிவசிவ
மாலை மாற்று
திருஞானசம்பந்தர் அருளிச் செய்த மாலை மாற்று - என்னும்
திருப்பதிகத்திற்கான உரையை சிந்திப்பதற்கு முன்னர்
அப் பதிகத்திற்கன இலக்கண வரலாறு குறித்து சிந்திப்பது
அதன் பெருமையை மேலும் பறைசாற்றும்.
தமிழ் இலக்கணம் அக இலக்கணம், புற இலக்கணம் என
இரு வேறு கூறுகளை கொண்டிருந்தாலும், அவற்றில் மிக முக்கியமாக கருதப்படுவது,
எழுத்து இலக்கணம்,
சொல் இலக்கணம்,
பொருள் இலக்கணம்,
யாப்பு இலக்கணம்,
அணி இலக்கணம்,
என்னும் ஐந்து வகையான இலக்கணங்களாகும்.
இதில், திருஞானசம்பந்தர் அருளிச் செய்த மாலை மாற்று - என்னும் திருப்பதிகம் " அணி இலக்கணம் " என்னும் வகையை சார்ந்ததாகும.
இன்னும் சரியாகச் சொல்லப் போனால்,
இந்த அணி இலக்கணம் என்பது
" பொருள் அணி " மற்றும் " சொல் அணி " என இருவகைப்படும்
இவற்றில்
பொருள் அணி என்னும் இலக்கணம் - 100 வகைப்படும்.
சொல் அணி என்னும் இலக்கணம் - 2 வகைப்படும்.
இந்த சொல் அணியின் இரண்டு வகையாவன,
மடக்கு மற்றும் சித்திரக்கவி எனப்படும்.
ஆக,
திருஞானசம்பந்தர் அருளிச் செய்த மாலை மாற்று -
என்னும் திருப்பதிகம் " சொல் அணி இலக்கணத்தில் உள்ள சித்திரக் கவி " என்னும் வகையைச் சார்ந்ததாகும்.
இதில் என்ன சிறப்பு என்றால்,
தமிழ் கூறும் நல்லுலகில் இந்த இருவகையான
( மடக்கு மற்றும் சித்திரக் கவி )
இலக்கணப் பிரிவுகளையும் முதன் முதலில் தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர் என்னும் பெருமை திருஞானசம்பந்தரையே சாரும்.
இந்த மாலை மாற்று என்னும் திருப்பதிகம் - சித்திரக் கவி என்னும் வகையைச் சார்ந்தது என்று பார்த்தோம்.
சித்திரக் கவி என்றால் என்ன ?
கடுமையான சொல் ஆட்சிகளையுடைய பாடல்களுக்கு
சித்திரக் கவி என்று பெயர்.
சித்திரக் கவிக்கு - மிறைக் கவி என்றும் ஒரு பெயர் உண்டு.
இந்த சித்திரக் கவி என்னும் அமைப்பில் இலக்கிய இலக்கணத்தில் தலைசிறந்த அறிஞர்களால் மட்டுமே பாட முடியும் என்பதே இதன் தனிசிறப்பாகும்.
சித்திரக் கவி என்பதற்காக - பொருளற்ற வார்த்தைகளைப்
போட்டு " எடக்கு மடக்காக " பாடாமல் -
பொருள் பொதிந்து பாட வேண்டும் என்பதே
இதன் பெருமைய உணர்த்தும்.
அவ்வாறு மிக அரிய கருத்துகளை உள்ளடக்கிப் பாடப்பட்டதே
" மாலை மாற்று " என்னும் திருப்பதிகமாகும்.
உவமையிலா கலைஞானமும் +
உணர்வரிய மெய்ஞ்ஞானமும் கைவரப்பெற்ற திருஞானசம்பந்தப் பெருமான்,
இது போல கிட்டத்தட்ட 15 வகையான சித்திரக் கவிகளை பாடியுள்ளார்.
அவை,
01. மொழி மாற்றுப் பதிகம்
02. மாலை மாற்று
03. வழிமொழி
04. மடக்கு
05. ஏகபாதம்
06. திரு இருக்குக் குறள்
07, திரு எழு கூற்றிருக்கை
08. ஈரடி
09. ஈரடி மேல் வைப்பு
10. நாலடி மேல் வைப்பு
11. முடுகு இராகம்
12. சக்கரமாற்று
13. வழி முடக்கும் ஆவின் பாய்ச்சல்
( திருக்கோமூத்திரி அந்தாதி )
14 . திருப் பல்பெயர் பத்து
15 . வினா - உரை
இத்தகைய சிறப்புமிக்க சித்திரக் கவிகளுள் ஒன்றுதான் -
" மாலை மாற்று " என்னும் திருப்பதிகமாகும்.
மாலை மாற்று - என்றால் என்ன ?
ஒவ்வொரு அடியிலும்,
முதலிலிருந்து இறுதிவரை அமைந்த ஒரு பாடல் வரியை
இறுதியிலிருந்து முதல் எழுத்து வரை அப்படியே திருப்பிப் படித்தாலும் எந்த மாற்றமும் இல்லாமல் அமைந்த பாடல் வரிக்கு " மாலை மாற்று " என்று பெயர்.
எடுத்துக்காட்டாக பார்த்தோம் என்றால்,
விகடகவி
குடகு
தாத்தா
குருகு
தேருவருதே
இப்படி எப்படி படித்தாலும் பொருள் தரும் வார்த்தைகள் நிறைய இருக்கின்றன.
ஆனால் இப்படி எளிமையாக ஒரு சொல்லில் அமையும் ஒரு விசயத்தை - ஒரு பதிகமாகவே பாடியிருக்கிறார் என்றால் திருஞானசம்பந்தரது பெருமையை என்ன வென்று சொல்வது ?
இப்பதிகத்திற்கான விளக்கத்தை பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும் - என்னும் பகுதியில் காணலாம்.
அதற்கான சுட்டி இங்கே...
திருச்சிற்றம்பலம்