Tuesday, 17 May 2011

அமாவாசை அன்று வந்த நிலா!!



பத்திரிகை ஆசிரியர் பணி என்பது எளிதானது அல்ல. எழுத்தாளர்கள்
அனைவருமே உணர்ச்சி வயப்படக் கூடியவர்களே.ஏதோ ஓர் உணர்ச்சி எழுத்தாளர்களை வந்து கவ்வும் போது எழுதத் துணிந்து விடுவாகள்.சமூகத்தில் தன் எழுத்தினால் என்ன பின் விளைவுகள் தோன்றும் என்றெல்லாம் யோசிக்காமல் எழுதிவிடுவார்கள்.அப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் கணக்குத்தான் வருமே தவிர‌, இலக்கியம் வராது.

ஓர் இதழ் ஆசிரியரின் பணியே இலக்கியத்தை சிதைத்து விடாமல்,
எழுத்தாளரின் படைப்பை செப்பம் செய்து,முன் பின் விளைவுகளைப் பற்றி ஆய்ந்து,காய்தல் உவத்தல் இல்லாமல், நடுவுநிலையில் நின்று ஆக்கத்தை எல்லோருக்கும் மகிழ்ச்சி தோன்றும் வண்ணம் வெளியிடுதலே ஆகும்.

எழுத்துப்பிழை, கருத்துப்பிழை,இலக்கணப்பிழை அனைத்தையும் சரி செய்ய வேண்டியது ஆசிரியரின் பொறுப்புத்தான்.

தமிழ்த்தாத்தா உவேசா அவர்களின் மாணவரும், கலைமகள் மாத இதழின்   ஆசிரியருமான வாகீச கலாநிதி கி.வா.ஜகன்னாதன் அவர்கள்
சிறந்த தமிழறிஞர் மட்டும் அல்ல. நல்ல சொற்பொழிவாளர்.நல்ல எழுத்தாளர்.
முக்கியமாக நல்ல இதழ் ஆசிரியர்(எடிடர்)

கலைமகளில் ஸுபா என்ற ஓவியர் படம் வரைந்து கொடுத்து வந்தார்.ஒரு முறை கலைமகள் தீபாவளி மலருக்கு ஸுபா ஓவியம் வரைந்து கொடுத்தார். அது ஒரு சிறு கதைக்கான ஓவியம். கதைப்படி தலை தீபாவளிக்கு  மாப்பிள்ளை மனைவியின் பிறந்த‌கத்திற்கு வந்துள்ளார். இளம் தம்பதிகள் தனிமையில் வீட்டின் மொட்டை மாடிய்ல் சந்தித்துக் கொள்கிறார்கள். வீட்டின் கிணற்ற‌டி,தோட்டம், தென்னை மரம் என்று அழகாக ஓவியத்தை வரைந்து இருந்தார் ஸுபா.வானத்தில் முழுநிலவு, அந்த நிலவு அளித்த மயக்கத்தில் காதல் வயப்பட்டு ஆணும் பெண்ணும் மகிழ்வுடன் காண்பதாக ஓவியம் அருமையாக இருந்தது.

பலரும் அந்த ஓவியத்தைப் பார்த்துப் பாராட்டிவிட்டனர். உதவி ஆசிரியர்கள் எல்லோரும் பார்த்துப் பாராட்டி ஒப்புதல் அளித்த பின்னர் தலைமை ஆசிரியர் கிவாஜ அவர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது ஓவியம். அவர் பார்த்து ஒப்புதல்
அளித்தாலே பிரசுரம் செய்ய முடியும்.உயர்திரு கிவாஜ அவர்கள் ஓவியத்தை உற்று நோக்கினாராம்.ஓவியர் ஸுபாவிடம்," மாப்பிளை தீபாவளிக்கு அல்லவா மாமனார் இல்லத்துக்கு வந்திருக்கிறார்?" என்று கேட்டாராம்.

"ஆமாம்!"  

"அப்புறம் எப்படி முழு நிலவை இந்த ஓவியத்தில் காண்பித்தீர்?"

"ஏன்?அந்தக் காதல் சூழலுக்கு நிலவு நல்ல உதவிதானே?"

"காதலுக்குச் சரி!தீபாவளிக்குப்பொருத்தம் இல்லயே!"

"ஏன் எப்படி?"


"தீபாவளி அமாவாசை அன்று அல்லாவா கொண்டாடப்படும். அன்று எப்படி முழு நிலவு இருக்கும்?"

ஓவியர் ஸுபா ஆசிரியர் கிவாஜ அவர்களின் கூர் நோக்கைக் கண்டு வியந்தாராம்.

ஆம்! கூர் நோக்கு உள்ளவர்களே இதழ் ஆசிரியப் பணி செய்ய முடியும். அதற்கு நல்ல எடுத்துக்காட்டு வாகீச கலாநிதி உயர்திரு கிவாஜ அவர்கள்.

2 comments:

  1. உண்மைதான் உணர்சிகளின் வெளிப்பாடு தான் கலை....
    இன்னும் சொல்லப் போனால்... உணர்ச்சியின் உச்சத்திற்கு /
    நுனிக்குச் செல்லக் கூடியவன் தான் கலைஞன்.

    அந்தக் கலைஞனின் நுண்ணியக் கலைப் படைப்பு தான்
    காலத்தால் அழியாததாக இருக்கும்...

    சமைத்தவன் சமைத்து தந்தாலும்... சமயோசிதமாக
    சமச் சீரோடு சம பங்கு; அதுவும் சம பந்தி வைக்கவேண்டியது
    சமத்தான நல்லிதழ் ஆசிரியரின் கடமை அல்லவா!
    ஆக சமைத்தவைகளை, அவனே முதலில் ருசிப்பவன்...
    அதற்கு அவன் தகுதியானவனாகவும் இருக்க வேண்டுமல்லவா...
    கூர் நோக்கும்... கூரிய புத்தியும்;
    மூன்றாம் பார்வையும், அதிலும் முழுமுதற் பார்வையும்
    வேண்டும் என்பதற்கு கட்டுரை நாயகரே நல் உதாரணம்....
    நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம் மாமி,

    //"தீபாவளி அமாவாசை அன்று அல்லாவா கொண்டாடப்படும். அன்று எப்படி முழு நிலவு இருக்கும்?"//

    அற்புதம் கி.வா.ஜ அவர்களின் நுண்ணறிவு..
    ஒரு படைப்பை படைத்துவிட்டு உடனே வெளியிட்டுவிடக் கூடாது..

    அதை நாமே ஒருமுறைக்கு இருமுறை வாசித்துப் பார்த்தப் பிறகே வெளியிடவேண்டும் என்ற உண்மை
    இதனால் பெறப்படுகிறது.

    நல்ல அவசியமான பதிவு..

    கி.வா.ஜா - மாதிரி நாங்களும்
    சி.மா. ஜா - ன்னு போட்டுக்கலாம்னு இருக்கோம்.
    ஹி ஹி ஹி...

    ReplyDelete