மஹாகவி பாரதியாரைப் பற்றி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம் என்ற நிலை உண்டாகிவிட்டது.
மேடை மீது ஏறி நின்று கொண்டு,"மெல்லத் தமிழினிச் சாகும்...' என்று பாரதியே சொல்லிவிட்டான்" என்று பேசக் கூடியவர்கள் பலர் உள்ளனர். ஒரு கூட்டத்தில் கவிஞர்(?) கனிமொழி அவ்வாறு திருவாய் மலர்ந்து அருளி இருக்கிறார்.
பாரதி அவ்வாறு கூறவில்லை என்று இவர்களுக்கு எத்தனை முறை கூறினாலும் செவிடன் காதில் ஊதிய சங்குதான்..!
சமீபத்தில் மூத்த நடிகர் சிவகுமார் தமிழ் புத்தாண்டு உரை விஜய் டி வியில் செய்தார்.பாரதியை அப்படியே ஒப்பித்தார். பல பாடல்களை அவ்ர் பாவத்தோடு ஒப்பித்தது பாராட்டுக்குரியது. அதுவும் அவர் வயதில் இவ்வளவு நினைவாற்றலா என்று ஆச்சரியமாக இருந்தது.நடிகர் குழாத்தில் இருந்து இப்படி ஒரு இலக்கியவாதியா? வியப்பாகத்தான் இருந்தது.
நடிகர் சிவகுமாரும் கூட பாரதியின் பாடலை அந்த ஒற்றை வரியுடன் தாவி விட்டார்.
உண்மையில் பாரதி தமிழன்னையின் கூற்றாக அப்படிச்சொல்கிறார்.
'யாரோ ஒரு பேதை அப்படிச் சொல்கிறான்.அவன் கூற்றினைப் பொய்யாக்குங்குள்' என்று தமிழருக்கு ஆணையிடுகிறாள் தமிழன்னை.
பாடல் வரிகள் இதோ:
"கன்னிப் பருவத்திலே அந்நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி எல்லாம்
என்னென்னவோ பெயருண்டு - பின்னர்
யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்!
தந்தை அருள் வலியாலும் - முன்பு
சான்ற புலவர் தவ வலியாலும்
இந்தக் கணமட்டும் காலன் - என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான்
இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!
"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"
என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
தந்தை அருள் வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."
கூறியவனை 'கூறத்தகாதவன்' என்றும், 'அந்தப் பேதை' என்றும் சொலவதைப் பாருங்கள்."நான் சொல்வதைக் கேட்டு செயல் பட்டால்
"புவிமிசை என்றும் இருப்பேன்" என்றும் தமிழன்னை கூறுகிறாள்.கவனியுங்கள்.
ஆனால் தாய்த் தமிழகத்தில் ஆங்கில வழிக் கல்வியின் மோகம் வளர்ந்துள்ள இந்நாளில், தமிழ் வளர்ச்சி பற்றி இலங்கைத் தமிழர்களோ, வேறு மேலை நாட்டுத் தமிழ் அறிஞர்களோ கவலைப் பட்டால்தான் உண்டு.
தமிழ் இனக் காவலர்களுக்கு அவர்களுடைய சொந்தப் பிரச்சனைகளும்,சொந்த பந்தங்களைப் பற்றிய பிரச்சனைகளுமே அதிகமாக உள்ளது.
இதைப் போன்ற புலம்பல்களை எல்லாம் படிக்க அவர்களுக்கு நேரம் ஏது?
பதிவு நன்றாக உள்ளது.'பாரதி தன் எண்ணத்தையே தமிழன்னையின் கூற்றாகக் கூறியுள்ளார்.மேலும் அந்தக் 'கூறத்தகாதவன், பேதை' பாரதிக்குள்ளேயே ஒளிந்துள்ளான்' என்றும் ஒரு கூற்று.
ReplyDeleteபாரதியின் மகள் தங்கம்மா பாரதியின் நினைவுகளைப் படித்தால் இதற்கு விடை கிடைக்கும்.ஒரு நாள் பாரதி வீட்டுக்க்கு வந்த இருவர், பாரதி கிணற்று அடியில் குளித்துக் கொண்டு இருந்த போது, அவருக்காக்க் காத்து இருந்த போது, பாரதிக்கு கேட்கவில்லை என்று நினைத்துத் தமக்குள் 'தமிழில் என்ன இருக்கிறது? மேலை நாட்டில் அறிவியல் வளர்கிறது. தமிழில் அதற்கான சொற்கள் உண்டா?' என்றெல்லாம் பேசிக்கொண்டு இருந்தனராம். கேட்ட மஹாகவி உள்ளம் கொதித்தநிலையில் கொட்டிய கவிதை அது என்கிறார் தஙம்மா பாரதி.
'அரிச்சுவடி'படித்தபின் தான் தமிழைச் சிறுகச் சிறுகப் படித்துப் பின் அதில் புலமை பெற முடியும். பாரதியைப் படிக்க விரும்புவர்கள் படிக்கும் முதல் பாடமாக இருப்பது இந்தப் பாடல்.பாரதியைப் படித்தவர்கள் எவருக்கும் இந்தப் பாடல் அத்துபடி, ஏன் தெரியுமா? இதில்தான் தமிழின் தொன்மை, வளம், பெருமை இவற்றைச் சொல்லி, இந்நாளில் அது அடைந்திருக்கும் தாழ்ச்சி பற்றி சொல்லி, ஆஆஆ... இந்தப் பழி எனக்கெய்திடலாமோ, சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று நமக்கு ஆணையிட்ட பகுதி இது. இதைத் தவறாக யாராவது புரிந்துகொண்டோ, பேசியோ இருந்தால் என்னவென்பது? விதி! விதி! விதி!
ReplyDeleteபாரதியைப் பற்றி எத்தனையோ அறிஞர் பெருமக்கள் தமிழகத்தில் மாத்திரம் மட்டுமல்ல, முன்னைய சோவியத்திலும், செக்கிலும் பலர் ஆராய்ந்து எழுதியவைகள் எண்ணிலடங்கா.... பாரதியின் காலமும் கருத்தும் என்றொரு நூல்... (வீட்டில் வைத்த இடம் தெரியாது தேடிக்கொண்டு இருக்கிறேன்) எஸ். ராமகிருஷ்ணன் பதினேழு வருடம் ஆராய்ந்து எழுதியது...
ReplyDeleteஇப்படி தமிழறிஞர்கள் பார்வையை விட்டு விட்டு ஏன் இந்த... பதிவு???? முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விஸ்வநாதன் அவர்களே...
தமிழுக்கு புது ரத்தம்
தந்த கவிஞனே
முந்து கவிகளெல்லாம்
மொழிக்கு கடன்பட்டவர்கள்,
ஆனால்
மொழியே கடன் பட்டது
முதன் முதலாய்
உனக்குத்தான்
கம்பனுக்குப் பிறகு
காணாமல் போன தமிழ்
எண்ணூறு வருஷம்
என்ன செய்தது?
வரகவியே! உன்னை
வரமாய்ப் பெறுவதற்குத்
தலைமறைவாய் இருந்து
தவமியற்றியதோ?........
..............................அவனவன் வேலி கட்ட
தமிழ் என்பதொன்றும்
தனி நபர் சொத்தன்று
எவனும்
ஆயிரங்காலத்தமிழை
அழித்துவிட முடியாது.
தமிழைக்
காப்பதாய் யாரும்
கதை சொல்லவும் கூடாது.
அது
தானே தன்னைக் காக்கும்
தவவலிமை
கொண்டதன்றோ?
புதுயுகக் கவியே
இன்னைப்
புரிந்து கொள்கிறோம்.
தமிழைக்
காக்கும் முயற்சியெனில்
ஆக்கும் முயற்சியென்று
அர்த்தப்படுத்துவோம்.
முதலில்
உன்னைப் புரிவதற்கு
எம்
பல்கலைக்கழகங்கள்
பாடம் படிக்கட்டும்.
(கவிராஜன் கதையில் வைரமுத்துவின் வரிகள்)
திரு. கோபாலன் ஐயா சொன்னது போல் அ, ஆ, படிப்பவர்களின் பேச்சுக்களைப் பேசி???.....
(நிகழ்கால அரசியல் வாதிகளை இலக்கிய சம்பந்தப் படுத்தி அவர்கள் வேண்டுமானால் பேசட்டும்... நாம்???)
நன்றி.
"பாரதியின் காலமும் கருத்தும்" நூலை எழுதியவர் தொ.மு.சி.ரகுநாதன் என்று நினைக்கிறேன். தயவு கூர்ந்து சரிபார்க்கவும்.
ReplyDelete////"பாரதியின் காலமும் கருத்தும்" நூலை எழுதியவர் தொ.மு.சி.ரகுநாதன் என்று நினைக்கிறேன். தயவு கூர்ந்து சரிபார்க்கவும்./////
ReplyDeleteஆமாம், தவறுக்கு மன்னிக்கணும்... தாங்கள் சொல்வது தான் சரியாக இருக்கும் (தங்களுக்கும் தீர்க்கமாக தெரியும் இருந்தும் பாடறிந்து ஒழுகும் உங்கள் மேன்மைக்கு நன்றிகள் ஐயா! ) ... எனக்கும் இந்த சந்தேகம் வந்தது... அதோடு நேற்று நள்ளிரவில் பின்னூட்டமிட்டேன்... சந்தேகத்தை போக்கும் அப்பாவும் தூக்கத்தில் இருந்தார்கள். நன்றி!
//மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
ReplyDeleteமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"//
ஆகா .. இந்த பேதையின் உரையை கேட்ட பாரதி கொதித்து எழுதியிருக்கும் வரிகளால் பாதியின் தமிழ் பற்றும் + தமிழின் பெருமையும் விளங்குகிறது..
நல்ல முயற்சி ..
This comment has been removed by the author.
ReplyDeleteநானும் சொல்ல வந்ததை
ReplyDeleteசொல்லாமல் விட்டுச் சென்றேன்..
என் நேரான பின்னூட்டம்
கூராகி நிற்கும்; அதுவே தங்களை
புதிய ஆக்கங்களுக்கும் வேருமாகும்...
"மெல்லத் தமிழினிச் சாகும்"
முன்னும் பின்னும் விட்டு
இடையில் பிடித்து தொங்கி
மொத்தக் கருத்தையும் மறைத்து
வேறொருக் கருத்தை திணித்து
மெத்த வளரும் தமிழின்
கழுத்தை பிடித்து நெரித்து
கொல்லாமல் கொல்லும்
இக் கொடிய செயல் அறுக்க
செந்தமிழாம் நற்றமிழை
மென் மேலும் வளர்க்க
எல்லோரும் கூடுவோம்
ஒன்றாய் பாடுபடுவோம்....
தங்களின் பதிவு அருமை...
தொடரட்டும் உங்கள் எழுத்து..
நன்றி சகோதிரி....
வாழ்த்துக்கள்....