Saturday, 30 April 2011

"இளைய பாரதத்தினாய் வா வா வா...."


இப்போது ந‌டந்து முடிந்த மக்கட்த் தொகைக் கணக்குப்படி 2018 ஆம் ஆண்டு 18 வயதில் இருந்து 25 வயதுவரை உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 30 கோடிக்கும் மேலே இருக்குமாம்.இது உலக நாடுகளிலேயே இளைஞர்களின் மக்கட்தொகையில் முதன்மையாக இருக்குமாம். இந்தக் கணக்கில் சீனா கூடப் பின்னால்தானாம்.

இதன் சாதக பாதகங்களை எண்ணிப் பார்த்தேன்.

சாதகமே நிறையத் தெரிந்தது.

முதலில் ஓட்டுரிமை பெற்ற ஒரு பெரிய இளைஞர் கூட்டம் இருக்கப் போகிறது.அன்னா ஹசாரேவுக்குப் பின்னால் நிற்கத் துணிந்த இளைஞர்களைக் கண்டோம்.சிறுமை கண்டு பொங்க‌க் கூடிய ஒரு பட்டாளம்  இளைமைத் துடிப்புடன் வெளி வந்தால் புரட்சிதான்.

புதிய பாதைகள், புதிய கண்டு பிடிப்புக்கள்,புதிய யுக்திகள் கோலோச்சும்.

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக வாழ்வதால்,கலப்புத் திருமணம், காதல் கடிமணம் அதிகமாகும். சாதிக்கட்டுக்கள் தளரும்.'இதெல்லாம் சஹஜமப்பா' என்ற மனோநிலை வரும்.

வாழ்வாதாரங்களை மேம்படுத்தப் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒவ்வொருவரும் த‌குதியுள்ளவற்றிற்கே  இங்கு இடம் என்னும் பரிணாமக் கொள்கையால் பாதிப்பு அடைந்துள்ளதால், தன் தகுதிகளை மேம் படுத்திக்கொள்ள ஒவ்வொரு இளைஞனும் பாடுபடுவான்.


அதனால் உற்பத்திபெருகும். நாடு வளம் பெரும். இப்படி பல சொல்லிக் கொண்டே போகலாம். பல சொல்லக் காமுறவில்லை

எதிர்மறையில் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விழைகிறேன். ஒழுக்கம் குன்றி விட்டால் எல்லாக் கற்பனைகளும் தவிடு பொடியாகிவிடும்.

டாஸ்மாக் கடைகள் நமது பெரும் வில்லனாக இருக்கும் என்று தோன்றுகிறது.அதற்கு எதிரான பிரச்சாரம் அவசியம் தேவை.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கும்!

சிறியன சிந்திக்க வேண்டாம்!

10 comments:

  1. நீங்கள் சொல்வது சரிதான். 2020ல் இந்தியா வலிமையான நாடாகும்.

    பாரதி சொன்ன 'உய்ய வேண்டிய பாதையை இந்தியா உலகுக்கு அளிக்கும்'!
    இது நடக்கத்தான் போகிறது. பார்க்க நாம் இருப்போமா?

    ReplyDelete
  2. 1947 ஆகஸ்ட் 15 அன்று ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நான் அன்று நடந்த கோலாகல விழாவிலும் ஊர்வலத்திலும் பள்ளியில் கொடியேற்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டேன். மாயூரம் வரதாச்சாரி பார்க்கில் முடிவடைந்த ஊர்வலத்தின் முன்னால் சிலர் தள்ளாடிக்கொண்டு கையில் ஒரு தவளையைப் பிடித்து வடை என்று தின்பது போலவும், அருகிலுள்ளவனும் போதையில் தடுமாறி உளறுவது போலவும் நடித்துக் கொண்டு வந்தனர். அப்போது எனக்கு அது சரியாகப் புரியவில்லை. பிறகுதான் தெரிந்தது, குடியின் கேடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த குடிகாரனுக்கு வடைக்கும், தவளைக்கும் வித்தியாசம் தெரியாது, நாகரிகமுள்ளவர்கள் அவர்களைச் சீண்ட மாட்டார்கள் என்பதை விளக்கும் ஆட்டம் அது. இரண்டு தலைமுறை மறந்திருந்த குடியை மீண்டும் கொண்டு வந்தது, இந்த சமுதாயத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கவா, அல்லது அரசாங்க வருமானத்துக்கா அல்லது மக்களை போதையிலேயே வைத்திருந்தால்தான் அவர்களை மூளைச்சலவை செய்து எப்போதும் தங்கள் அடிமைகளாக வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமா? கடைசி காரணம்தான் சரியாக இருக்குமென்று நினைக்கிறேன். இன்றைய நிகழ்ச்சிகள் அதனைத்தான் நிரூபிக்கின்றன. மகாத்மா காந்தியும், ராஜாஜியும் விரும்பிய அந்தப் பொன்னான சமுதாயம் என்று அமையும்?

    ReplyDelete
  3. நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கும்!

    சிறியன சிந்திக்க வேண்டாம்!

    தங்களது எண்ணங்கள் ஈடேற இறைவனை பிரார்த்திக்கிறேன்..

    ReplyDelete
  4. ///இரண்டு தலைமுறை மறந்திருந்த குடியை மீண்டும் கொண்டு வந்தது, இந்த சமுதாயத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கவா, அல்லது அரசாங்க வருமானத்துக்கா அல்லது மக்களை போதையிலேயே வைத்திருந்தால்தான் அவர்களை மூளைச்சலவை செய்து எப்போதும் தங்கள் அடிமைகளாக வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமா?///

    வேறொறு சுயநலக் காரண‌மும் உண்டு. சாரயக் கம்பெனிகள் கொடுக்கும் கணிசமானக் கையூட்டு!

    ReplyDelete
  5. ///தங்களது எண்ணங்கள் ஈடேற இறைவனை பிரார்த்திக்கிறேன்..///

    நன்றி இடைப்பாடியாரே!

    ReplyDelete
  6. //////எதிர்மறையில் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விழைகிறேன்.
    ஒழுக்கம் குன்றி விட்டால் எல்லாக் கற்பனைகளும் தவிடு பொடியாகிவிடும்.////

    எதிர்மறை அல்லவே இது தான் முக்காலும் உண்மை, சத்தியம்....
    திறமை, கடின உழைப்பு, இவைகள் அனைத்தையும் ஒழுக்கமின்மை
    ஒரு நொடியில் தூளாக்கிவிடும்... இது, எல்சின் என்றோ,
    டைகர் வுட்ஸ் என்றோ, கிளிண்டன் என்றோ.... பேதம் பார்க்காது...
    நல்ல நேரம் இருந்தால்... ஆரம்பத்திலே அங்கேயே நான்கு இரண்டு
    பேருக்குள்ளே முடிந்து உணர்த்திவிடும்... இல்லைஎன்றால் உச்சாணிக் கொம்புக்குப்
    ஏற்றிவிட்டு அப்புறம் அடிக்கும் அதுவும் மரண அடி...

    தனி மனித ஒழுக்கம்... குடும்பத்தில், பள்ளியில் மூன்றாவதாக சமூகத்தில் நிர்ணயிக்கப் படுகிறது..
    இதில் குடும்ப பாரம்பரியம் பெரும் பங்கு வகிக்கிறது... கோவில் பூசாரி குடிக்காமல் இருப்பதை விட
    சாராயம் விற்பவனே குடிக்காமல் இருந்தால் தான் பெரிய விஷயம் என்ற ஒரு வழக்குச் சொல் உண்டு..

    சாராயக் கடைகளை தாராளமயமாக்கி.... சந்து பொந்தெல்லாம் அப்பூதி அடிகள் தண்ணீர் பந்தலைப் போல்
    வழிந்தோடும் தமிழகத்தில்.... எதைச் சொல்வது... அரசாங்கம் உன் வாழ்க்கை உன்கையில் என்று சொல்லி
    ஆலை நடத்துகிறது.... அதைக் கேட்பாரும் யாரும் இல்லை என்பதும் அதைவிட அவலம் தான்.... அனைத்து
    அரசியல் கட்சிகளுமே வாய்ச்சொல் வீரராக.... செயலில் இறங்காமலே இருப்பதும் துரதிஷ்டமே...

    உங்கள் அழைப்பு இளைஞர் படைக்கு எட்டிவிட்டது போலும்.. கீழே பாருங்கள் நல்ல செய்தி...

    /////சென்னையில் இன்று அன்னா ஹசாரே கரத்தை வலுப்படுத்த மனித சங்கலியாக கை கோர்ப்போம்
    என்று அறிவித்து இருந்தனர். காலை 6 மணிக்கு மெரீனா கடற்கரைக்கு திரண்டு வந்த மக்கள் கூட்டத்தை
    பார்த்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களே ஆச்சரியம் அடைந்தனர்.////

    நல்ல பதிவு... நன்றி சகோதிரி...

    ReplyDelete
  7. //சாராயக் கடைகளை தாராளமயமாக்கி.... சந்து பொந்தெல்லாம் அப்பூதி அடிகள் தண்ணீர் பந்தலைப் போல்
    வழிந்தோடும் தமிழகத்தில்...//

    இக்கருத்தை தவிர்த்திருக்கலாமே ஆலாசியம் ஜீ..
    செயற்கரிய செய்கை செய்த அப்பூதி அடிகளை போய்
    செய்யக்கூடாத அசிங்கத்தை செய்யும் அரசியல்வாதிகளோடு ஒப்பிடலாமா ?

    சாராயக் கடைகளை - உயிருக்கு அவசியமான தண்ணீர் பந்தலோடு ஒப்பிடலாமா ?

    என் கருத்தில் தவறிருந்தால் குறிப்பிடுங்கள் ..
    தங்கள் கருத்தில் தவறிருந்தால் திருத்திவிடுங்கள்..
    நன்றி...

    ReplyDelete
  8. ///தனி மனித ஒழுக்கம்... குடும்பத்தில், பள்ளியில் மூன்றாவதாக சமூகத்தில் நிர்ணயிக்கப் படுகிறது..இதில் குடும்ப பாரம்பரியம் பெரும் பங்கு வகிக்கிறது.../// ///
    முக்காலும் உண்மை. வாஸ்தவமான பேச்சு

    ReplyDelete
  9. ///இக்கருத்தை தவிர்த்திருக்கலாமே ஆலாசியம் ஜீ..
    செயற்கரிய செய்கை செய்த அப்பூதி அடிகளை போய்
    செய்யக்கூடாத அசிங்கத்தை செய்யும் அரசியல்வாதிகளோடு ஒப்பிடலாமா ?///

    சாராயக்கடைகள் தண்ணீர் பந்தல் போலப் பெருகிவிட்டன என்று மட்டும் எடுத்துக்கொள்வோம்.தவறாக அவதானிக்க வேண்டாம் ஜானகிராமன் ஐயா!

    ReplyDelete
  10. சாராயக்கடைகள் தண்ணீர் பந்தல் போலப் பெருகிவிட்டன என்று மட்டும் எடுத்துக்கொள்வோம்.தவறாக அவதானிக்க வேண்டாம் ஜானகிராமன் ஐயா!
    உண்மை தான் சகோதிரி...
    ஒரு காலத்தில்... அப்பூதி அடிகள் போன்ற புண்ணியவான்கள் செய்தவைகளை நினைக்கும் போது இப்போது அந்த அளவிற்கு பல இடத்தில் சாராயக் கடைகளை திறந்து வைத்து... வேறுவிதமான புண்ணிய காரியம் நடந்து கொண்டு இருக்கிறது என்ற ஆதங்கம் தான்.... மாறுதலாக யோசிக்கச் செய்துவிட்டது என்பதாக... (வஞ்சபுகழ்ச்சி..)

    ReplyDelete