Saturday, 23 April 2011

Wedding Day


இன்று என் திருமண நாள்.37வது திருமண நாள்.36 வருடங்கள் முடிந்து 37வது வருடம் துவங்குகிறது.காலம் ஓடியதே தெரியவில்லை.20வயது முடிந்த‌  பெண்ணாகத் திருமணம் முடித்து பிறந்து வளர்ந்த சென்னைச் சூழலைத் துறந்து
சிறிய நகரத்திகுக் குடி ஏறியது, ஏதோ நேற்று நடந்தது போல உள்ளது.

நான் +1 முடித்து, இடைநிலை ஆசிரியப் பயிற்சி முடித்துவிட்டு, சென்னையில் ஒரு பள்ளியில் மிகவும் சொற்ப சம்பளத்தில் பணி ஆற்றினேன்.திருமணம் ஆகிவிட்டதால், இருந்த வேலையையும் விட்டு விட்டுப் புலம் பெயர்ந்து வந்தாகிவிட்டது.

1975 முதல் 1984 அக்டொப‌ர் மாதம் வரை சும்மா வீட்டுக் குடித்தனம் தான். சமையல் சாப்பாடு,வராந்திர மாதாந்திர பத்திரிகை வாசிப்பு(தொலைக்காட்சி பரவாத சமயம்; எனவே சீரியல் கிடையாது;அதனால் பத்திரிகை படிக்கும் வழக்கம் உண்டு) கணவருக்கு எடுபிடி வேலை, வீடு தோட்டம் பராமரிப்பு, சமயத்தில் தோபி வேலை, சுகாதாரப்பணியாளர் வேலை என்று ஒரு நடுத்தரக் குடும்ப மனையாட்டியாகவே மாறிவிட்டேன். வாழ்க்கையில் எந்த'சேலஞ்சு'ம் இல்லை.அப்படியேதான் இறுதிவரை இருக்கும் என்றே எண்ணியிருந்தேன்.
ஆனால் காலம் என்னை மாற்றிவிட்டது.

1976,1979,1982 ஆகிய மூன்று வருடங்களில் பிரசவம் நடந்து மூன்று பெண் குழ‌ந்தைகளுக்குத் தாய் ஆனேன்.அவர்களுடைய வளர்ப்பு, படிப்பு என்று நேரம்
பற்றவில்லை.

1977 ஜூன் 6ந்தேதி தனிக்குடித்தனம் போனோம்.இதன் நடுவில் 1977 ஜனவரி 26 அனறு என் பெரிய மைத்துனர் மறைவு.1980ல் அந்த பெரிய ஓர்படியாரும் மறைவு. அவர்களுடைய 3 குழந்தைகளுக்கும் பொறுப்பு என்று பலசூழல்கள்.

அந்தக் காலகட்டத்தில் பல குழப்பங்கள் ஏற்பட்டாலும், இரண்டு ஆக்கங்கள் நிகழ்ந்தன.

நாங்கள் குடிபோன கட்டிய வீட்டைக் கிரயம் பேசி வாங்கி விட்டோம். அந்த வீட்டிலேயே 1977 முதல் 2011 வரை இருந்தோம். 1997ல் மாடியைக் கட்டினோம்.

இரண்டாவது ஆக்கம் நான் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் இடைநிலை ஆசிரியைஆக 14 அக்டோபெர் 1984ல் பணி நியமன உத்திரவு பெற்றேன்.
1 ஏப்ரில் 2010வரை பணி செய்து ஓய்வு பெற்றேன்.

வேலைக்குப் போனதால் என் 3 பெண்களையும் நன்கு படிக்க வைக்கவும், திருமணம் செய்யவும் ஏதுவாகியது.

வேலையில் சேர்ந்த பின்னர் +2 முடித்து, பி எஸ்ஸி முடித்து, பி எட் முடித்து
எம் எட் முடித்துப் பட்டம் பெற்றேன். அந்தத் தேர்வுகள் எழுதும் சமயம் என் வீட்டுக் கட‌மையோ, பள்ளிக் கடமையோ எதுவும் குறைவு படாமல் பார்த்துக்கொண்டேன்.நான் படிக்கத் துவங்கு முன்னரே,

"படிக்கிறாய் என்பதால் உன்னுடைய தினசரி நடைமுறை எதுவும் மாறக்கூடாது.எல்லாக்கடமையையும் ஆற்றிக் கொண்டே அதற்கும் மேல் நேரம் ஒதுக்கிப் படிக்க முடிந்தால் படி.நாங்கள் ஒத்துழைக்கவில்லை என்று குறை சொல்லக்கூடாது."

என்று கணவரும் ,மாமியாரும் நிபந்தனை விதித்தார்கள். ஓரளவு யாருக்கும் எந்தத் தொந்திரவும் இல்லாமல் படித்து முடித்தேன். அந்தத் திருப்தி மனதுக்கு ஆறுதலாக உள்ளது.

இந்த வாழ்க்கையில் பல ஏற்றத் தாழ்வுகள். மகிழ்ச்சியும், சோகமும்.குணமும் கோபமும்; நல்லதும் கெட்டதும்;நட்பும் பகையும் என்ற இரட்டைகளைப் பார்த்தாயிற்று.

ஆனாலும் நாமும் ஏதோ சாதித்து இருக்கிறோம் என்ற உள்ள‌ நிறைவு உள்ளது.

எல்லாம் நம்மை ஆட்டுவிக்கும் 'அவனா'ல் அல்லவோ நடக்கிற்து.

அந்த ஆண்டவருக்கு நன்றி!








5 comments:

  1. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.இன்னும் பல திருமண நாட்களையும்,பிறந்த நாட்களையும்,
    பண்டிகை நாட்களையும் கண்டு 100 அகவைகள் 'வாழ்க வளமுடன்' என்று வாழ்த்துகிறேன்

    உஙளுடையது உண்மையிலேயே நல்ல
    'அச்சீவ்மெண்ட்'தான்.வேண்டிய வரை குடும்பத்திற்கு உழைத்தாயிற்று.இனி நாட்டையே குடும்பமாகப் பார்த்து(வசுதேவ குடும்பகம்) பல சமூகப் பணிகளை ஆற்றினால் மேலும் திருப்தி ஏற்படும்! உள்ள நிறைவு உண்டாகும்.!

    ReplyDelete
  2. திருமண நாள் இன்று என அறிந்து சந்தோஷம்.
    மாலையும் கழுத்துமாய் 84, மௌன்ட் ஹவுஸ் லே பார்த்தது
    இன்னும் நினைவு இருக்கிறது.
    என் வாழ்த்துக்கள்.

    மீனாட்சி பாட்டி.
    ( யாரா ? உங்கள் மாமியார் என்னை தன் மூத்த பெண் மாதிரி அல்லவா
    பார்த்துக்கொண்டிருந்தார்..)

    ReplyDelete
  3. எனக்கு என்றும் நீங்கள் மீனாட்சி மாமிதான். பாட்டியெல்லாம் ஒத்துக் கொள்ளமுடியாது.சிவன் கண் டிசைனில் ஒயர் பேக் போடக் கற்றுக் கொடுத்தது,
    டைல‌ரிங்கில் அறிமுகம் எல்லாம் எனக்கு சொல்லிக் கொடுத்ததை மறக்க முடியுமா? புதுப் பெண்ணான எனக்கு நல்ல தோழியாக இருந்து குடும்பம் நடத்துவது பற்றியெல்லாம் ஒரு முன் உதாரணமாக இருந்ததையெல்லாம் நினைவு கூர்கிறேன்.

    ReplyDelete
  4. Wish you both KMR sir and you a very Happy wedding anniversary!

    ReplyDelete
  5. //hotcat said...
    Wish you both KMR sir and you a very Happy wedding anniversary!//
    Thank you Sankar.Come often. Introduce this blog to friends.

    ReplyDelete