Saturday 30 April 2011

"இளைய பாரதத்தினாய் வா வா வா...."


இப்போது ந‌டந்து முடிந்த மக்கட்த் தொகைக் கணக்குப்படி 2018 ஆம் ஆண்டு 18 வயதில் இருந்து 25 வயதுவரை உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 30 கோடிக்கும் மேலே இருக்குமாம்.இது உலக நாடுகளிலேயே இளைஞர்களின் மக்கட்தொகையில் முதன்மையாக இருக்குமாம். இந்தக் கணக்கில் சீனா கூடப் பின்னால்தானாம்.

இதன் சாதக பாதகங்களை எண்ணிப் பார்த்தேன்.

சாதகமே நிறையத் தெரிந்தது.

முதலில் ஓட்டுரிமை பெற்ற ஒரு பெரிய இளைஞர் கூட்டம் இருக்கப் போகிறது.அன்னா ஹசாரேவுக்குப் பின்னால் நிற்கத் துணிந்த இளைஞர்களைக் கண்டோம்.சிறுமை கண்டு பொங்க‌க் கூடிய ஒரு பட்டாளம்  இளைமைத் துடிப்புடன் வெளி வந்தால் புரட்சிதான்.

புதிய பாதைகள், புதிய கண்டு பிடிப்புக்கள்,புதிய யுக்திகள் கோலோச்சும்.

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக வாழ்வதால்,கலப்புத் திருமணம், காதல் கடிமணம் அதிகமாகும். சாதிக்கட்டுக்கள் தளரும்.'இதெல்லாம் சஹஜமப்பா' என்ற மனோநிலை வரும்.

வாழ்வாதாரங்களை மேம்படுத்தப் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒவ்வொருவரும் த‌குதியுள்ளவற்றிற்கே  இங்கு இடம் என்னும் பரிணாமக் கொள்கையால் பாதிப்பு அடைந்துள்ளதால், தன் தகுதிகளை மேம் படுத்திக்கொள்ள ஒவ்வொரு இளைஞனும் பாடுபடுவான்.


அதனால் உற்பத்திபெருகும். நாடு வளம் பெரும். இப்படி பல சொல்லிக் கொண்டே போகலாம். பல சொல்லக் காமுறவில்லை

எதிர்மறையில் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விழைகிறேன். ஒழுக்கம் குன்றி விட்டால் எல்லாக் கற்பனைகளும் தவிடு பொடியாகிவிடும்.

டாஸ்மாக் கடைகள் நமது பெரும் வில்லனாக இருக்கும் என்று தோன்றுகிறது.அதற்கு எதிரான பிரச்சாரம் அவசியம் தேவை.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கும்!

சிறியன சிந்திக்க வேண்டாம்!

Thursday 28 April 2011

"மெல்லத் தமிழினிச் சாகும்...?"





மஹாகவி பாரதியாரைப் பற்றி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம் என்ற நிலை உண்டாகிவிட்டது.

மேடை மீது ஏறி நின்று கொண்டு,"மெல்லத் தமிழினிச் சாகும்...' என்று பாரதியே சொல்லிவிட்டான்" என்று பேசக் கூடியவர்கள் பலர் உள்ளனர். ஒரு கூட்டத்தில் கவிஞர்(?) கனிமொழி அவ்வாறு திருவாய் மலர்ந்து அருளி இருக்கிறார்.

பாரதி அவ்வாறு கூறவில்லை என்று இவர்களுக்கு எத்தனை முறை கூறினாலும் செவிடன் காதில் ஊதிய சங்குதான்..!

சமீபத்தில் மூத்த நடிகர் சிவகுமார் தமிழ் புத்தாண்டு உரை விஜய் டி வியில் செய்தார்.பாரதியை அப்படியே ஒப்பித்தார். பல பாடல்களை அவ்ர் பாவத்தோடு ஒப்பித்தது பாராட்டுக்குரியது. அதுவும் அவர் வயதில் இவ்வளவு நினைவாற்றலா என்று ஆச்சரியமாக இருந்தது.நடிகர் குழாத்தில் இருந்து இப்படி ஒரு இலக்கியவாதியா? வியப்பாகத்தான் இருந்தது.

நடிகர் சிவகுமாரும் கூட பாரதியின் பாடலை அந்த ஒற்றை வரியுடன் தாவி விட்டார்.

உண்மையில் பாரதி தமிழன்னையின் கூற்றாக அப்படிச்சொல்கிறார்.
 'யாரோ ஒரு பேதை அப்படிச் சொல்கிறான்.அவன் கூற்றினைப் பொய்யாக்குங்குள்' என்று தமிழருக்கு ஆணையிடுகிறாள் தமிழன்னை.

பாடல் வரிகள் இதோ:


"கன்னிப் பருவத்திலே அந்நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி எல்லாம்
என்னென்னவோ பெயருண்டு - பின்னர்
யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்!

தந்தை அருள் வலியாலும் - முன்பு
சான்ற புலவர் தவ வலியாலும்
இந்தக் கணமட்டும் காலன் - என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான்

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள் வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."

கூறியவனை 'கூறத்தகாதவன்' என்றும், 'அந்தப் பேதை' என்றும் சொலவதைப் பாருங்கள்."நான் சொல்வதைக் கேட்டு செயல் பட்டால்
"புவிமிசை என்றும் இருப்பேன்" என்றும் தமிழன்னை கூறுகிறாள்.கவனியுங்கள்.

ஆனால் தாய்த் தமிழகத்தில் ஆங்கில வழிக் கல்வியின் மோகம் வளர்ந்துள்ள இந்நாளில், தமிழ் வளர்ச்சி பற்றி இலங்கைத் தமிழர்களோ, வேறு மேலை நாட்டுத் தமிழ் அறிஞர்களோ கவலைப் ப‌ட்டால்தான் உண்டு.

தமிழ் இனக் காவலர்களுக்கு அவர்களுடைய சொந்தப் பிரச்சனைகளும்,சொந்த பந்தங்களைப் பற்றிய பிரச்சனைகளுமே அதிகமாக உள்ளது.

இதைப் போன்ற புலம்பல்களை எல்லாம் படிக்க அவர்களுக்கு நேரம் ஏது?

Tuesday 26 April 2011

பூசை வேண்டுமா?





திருவண்ணாமலை பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அதிகம் பேச மாட்டாராம். பேசினாலும் ரத்தினச் சுருக்கமாக வந்து விழுமாம்.

ஸ்ரீரமண ஆஸ்ரமம் ஆரம்பித்த புதிதில் எல்லாம் குடிசைகள்தான். இரவு ஹரிகேன் விளக்குதான். அப்போதே ஸ்ரீரமணருக்கு வெளிநாட்டுச் சீடர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள்.

வெளி நாட்டுக்காரர்கள் வந்து போவதால் ஸ்ரீரமணாஸ்ரமத்தில் நிறையப்பணம் இருக்கும் என்று சில தொழில் முறைத் திருடர்களுக்குத் தோன்றிவிட்டது.

ஒருநாள் நள்ளிரவில் ஆஸ்ரமத்தில் நுழைந்து அட்டகாசம் பண்ணிவிட்டார்கள்.

எல்லோரையும் எழுப்பி வரிசையாக நிறுத்தி விட்டார்கள்.

"இருட்டில் தேடுகிறீர்களே இந்தாருங்கள் விளக்கு" என்று ஹரிக்கேன் விளக்கைப் பொருத்திக் கொடுத்தாராம் ஸ்ரீரமணர்.

மண்ணைத் தோண்டிப் பார்த்தும் ஒன்றும் கிடைக்கவில்லை.கோவம் அடைந்து பக்தர்களை அடிக்கத் துவங்கினார்கள்.

'எங்கே ஒளித்து வைத்து உள்ளீர்கள்? சொல்லுங்கள்' என்று கேட்டு அடித்துள்ளார்கள்.

ஸ்ரீரமணர் மீதும் அடி விழுந்து விட்டது.பல மணி நேரம் தேடியும் ஒன்றும் கிடைக்காமல் திருடர்கள் ஓடிவிட்டார்கள்.

மறுநாள் காலை செய்தி ஊர் முழுவதும் பரவிவிட்டது.போலீசுக்கும் தெரிந்து
அந்த ஊர் காவல் ஆய்வாளர் ஆஸ்ரமத்திற்கு வந்து விசாரித்தார்.

"உங்க‌ளையும் அடித்தார்களா சுவாமி?" என்று கேட்டார்.

ஸ்ரீரமணர் சிரித்துக்கொண்டே, "சுவாமிக்கும் பூசை போட்டார்கள்" என்றாராம்

பூசை என்றால் அடித்தல் என்றும் பேச்சு வழக்கில் பொருள் உண்டு.

Monday 25 April 2011

"மது கைவிடேல்"


சென்ற ஆக்கத்தில் 'மனமது' என்று சேர்த்து எழுதியது ஏதோ "மது"வை நினைவு படுத்துவது போல உள்ளது என்று பெரியவர் கோபாலன் அவர்கள் கூறியிருந்தார்.

அதை ஒட்டி எழுந்த சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

முன்பெல்லாம் பதம் பிரித்து எழுதுவது குற்றமாகவே நினைக்கப்பட்டது. செய்யக்கூடாத இலக்க்ணப் பிழையாகவே கருதப்பட்டது. ஆனால் இன்று வெண்பாக்களைக் கூட பதம் பிரித்துச் சொல்ல வேண்டியுள்ளது.

"ஊக்கமது கைவிடேல்" என்பதற்கு ஊக்கம் அளிக்கக்கூடிய மதுவை, சாராயத்தைக் கைவிட வேண்டாம் என்பதாகவும் குயுக்தியாகச் சொல்லலாம் அல்லவா?அதுவும் சாராயத்திற்கு' உற்சாக பானம்' என்ற சொற்களை தினமலர் நாளிதழ் மக்கள் மனதில் பதித்து விட்டப் பிறகு நான் கூறிய பொருளைச் சொன்னால் அடுத்த தலைமுறை தங்களுடைய சாராயப் பழக்கத்திற்கு அவ்வையார் அளித்த அங்கீகாரம் என்று கூடப் பிரச்சாரம் செய்வார்கள்.
எனவே "ஊக்கம் அது கைவிடேல்" என்று பிரித்து எழுதி விடுவதே அவ்வைப் பாட்டிக்கு நாம் செய்யும் மரியாதை.

1980‍=90 களில் நாங்கள் நடத்தி வந்த சத் சங்கத்திற்கு ஒரு நாயர் வகுப்பைச் சார்ந்த அன்பர் வருவார். ஒருநாள் அவர் சிரித்துக்கொண்டே கூறினார்,

"கண்ண பரமாத்மா எங்க‌ள் நாயர் வகுப்பைச் சார்ந்தவர் தான்!"

"அதெப்படி? அவர் யாதவர் என்று சொல்லலாம், இடையர்களோடு வளர்ந்ததால்!பிற்ந்ததோ அரசர் குலத்தில்!அப்புறம் எப்படி நாயர் என்று சொல்கிறீர்கள்?"

"சிறிது நேரம் முன்பு நீங்கள் பாடிய பாட்டை மீண்டும் பாடுங்கள்."

"தாயே யசோதா உந்தனாயர் குலத்துதித்த...."

"நிறுத்துங்கள்! பாருங்கள் நீங்களேதானே பாடுகிறீர்கள் 'நாயர் குலத்து உதித்த.."

"ஹைய்யோ ஹைய்யோ! அது 'உந்தன் ஆயர் குலத்து உதித்த' நாயர் சார்!
போனால் போகட்டும். நாயர்கள் இப்படி ஒரு சந்தோஷம் அடைந்தால் அடையட்டுமே" என்றேன்

அந்தக்காலத்தில் சாப்பாட்டுக் கடைகளில் பிராமணர்களுக்குத் தனிப் பந்தி இருந்ததாம்."அன்ன விக்ரயம்" கலிகாலத்தில் நடக்கும்;அதையும் பிராமணனே செய்வான் என்று கலிகாலத்தினைப் பற்றிச் சொல்லியுள்ளதாம். என் மாமியார் சொல்லிக் கேள்விப் பட்டேன். 'அன்ன விக்ரயம்' என்றால் உணவினை வியாபாரமாக விற்பது. அதாவது ஹோட்டல் நடத்துவது.

ஒரு ஹோட்டலில் இப்படி அறிவிப்புப் பலகை இருந்ததாம்:

"பிராமணர் கள் சாப்பிடும் இடம்"

இது தவறாகப் பதம் பிரித்ததால் வந்த விபரீதம்.

"பிராமணர்கள் சாப்பிடும் இடம்" என்று இருக்க வேண்டும்.

அதுசரி!இன்றைய தேதியில் வகுப்பு வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் கள், சாராயம்  சாப்பிடுகிறார்களே என்று என்ன‌வர் முணுமுணுக்கிறார்.
என்ன செய்வது? கலிகாலம்.

"அம்பிகா காபி ஸ்டோர்" என்ற போர்டை, குசும்பாக,அந்தக் கடை முன்பே போய் நின்று கொண்டு,

"அம்பி காகா பீ!"என்று உரக்கப் படித்து, அந்தக் கடைக்காரர் இதை கவனித்து,அப்படி படித்த சிறுவர்களைப் பிடிக்க ஓடி வந்தாராம். அவரிடம் இருந்து தப்பிக்க குதியங்கால் பிடரியில் பட ஓடி வந்தார்களாம் அந்தச் சிறுவர்கள்.

அந்தச் சிறுவர்களில் ஒருவர் என்னவர். மற்றவர் யார் என்பதை அவருடைய அனுமதி யில்லாமல் சொல்லக் கூடாது.

எல்லாம் தமாஷுக்காக எழுதப்பட்டது. யாரும் வேறு விதமாக நினைத்து சண்டைக்கு வராதீர்கள்.

Sunday 24 April 2011

மனம் அது செம்மையானால்........????


என் அகத்துக்காரர் கொஞ்சம் செயலூக்கம் அதீதமாகப் பெற்றவர்.Hyperactive.!!

பொதுத் தொண்டு செய்கிறேன் என்று வீட்டைப் புறக்கணித்து விடுவார்.அவ்வப் போது அவரை நடைமுறை வாழ்க்கைக்கு இழுப்பதும் என் வேலை ஆகிப் போனது.

இவர் செய்யும் நற்செயலால் பலருக்கும் நன்மை ஏற்பட்டாலும்,ஒரு சிலர் பாதிப்பும் அடையக்கூடும், அப்படி பாதிப்புக்குள்ளனவர்கள் இவருக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்று யூகிக்க‌க் கூட‌ மாட்டார்.

எடுத்துக்காட்டாக,இவர் ஒரு மாலை நேர இலவச‌ மருந்தகம் நடத்தினால் உடனடி பாதிப்பு அந்தப் பகுதியில் கிளினிக் வைத்துள்ள மருத்துவர், மருந்துக்கடை ஆகியவர்களுக்கு வருமான இழப்பு. அவர்கள் இவருடைய நற்செயலை அழிக்கத் திட்டம் போடுவர்.இது தெரியாமல், 'எங்கேயோ இடிக்கிறதே' என்று வீட்டில் வந்து புலம்புவார்.நான் புலன் ஆய்வு செய்து இவ‌ருக்குச் சொல்ல வேண்டும்.

"ஒன்றே செய் அதையும் நன்றே செய்!" என்று அடிக்கடி கூறுவார்.அதற்காக ஒரு செயல் கிடைத்துவிட்டால் அந்தச் சிந்தனையில் முழுமையாக ஆழ்ந்து, தினசரி நடைமுறையான குளித்தல், உண்ணுதல், உறங்குதல், வழிபாடு
எல்லாவற்றையும் துறந்து 'கொக்குக்கு ஒன்றே மதி' என்பது போல பித்தனைப் போல ஆகிவிடுவார்.

ஒரு சமயம், அவரிடம் கேட்டேன்:"என்ன, ஒரு சுவாமி நமஸ்காரம் கூடச் செய்யாமல் அப்படிப் பொதுத் தொண்டு?"

அவருடைய பதில் ஒரு பாடலாக வந்தது:

"மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
 மனமது செம்மையானால் வாசியைக் கட்ட வேண்டாம்
 மனமது செம்மையானால் பூசனைகள் புரிய வேண்டாம்
 மனமது செம்மையானால் மரணத்தை வெல்ல லாமே"

"இது யார் பாடல்?"

"திருமூலர் பாடல் என்று தோன்றுகிறது"

"அந்தப் பாடலில் நான்கு முறை 'ஆனால், ஆனால்' என்று வருகிறதே; அதைப் பற்றிச் சிந்தித்தீர்களா?"

"சிந்திக்கவில்லை. நீதான் என்ன என்று விளக்கேன்"

"அது ஒரு BIG IF !அந்தப் பாடலையே நான் மாற்றிச் சொல்கிறேன் பாருங்கள்.அப்போது சரியான பொருள் விளங்கும். இலக்கணத்தைப் பார்க்காதீர்கள்"

"சரி சொல்லு தாயே!"

"மனமது செம்மையுறாதோன் மந்திரம் செபிக்க வேண்டும்
 மனமது செம்மையுறாதோன் வாசியைக் கட்ட வேண்டும்
 மனமது செம்மையுறாதோன் பூசனைகள் புரிய வேண்டும்
 மனமது செம்மையுறாதோன் மரணத்தை வெல்லல்அரிது"

"நீ சொல்வதுதான் சரியான பொருள்.ஏற்றுக் கொண்டு இனி ஒழுக்கத்திற்கு வருகிறேன்"

வேதாளம் அடுத்த முருங்கை மரத்தில் ஏறும் வரை இது தாங்கும்!


Saturday 23 April 2011

Wedding Day


இன்று என் திருமண நாள்.37வது திருமண நாள்.36 வருடங்கள் முடிந்து 37வது வருடம் துவங்குகிறது.காலம் ஓடியதே தெரியவில்லை.20வயது முடிந்த‌  பெண்ணாகத் திருமணம் முடித்து பிறந்து வளர்ந்த சென்னைச் சூழலைத் துறந்து
சிறிய நகரத்திகுக் குடி ஏறியது, ஏதோ நேற்று நடந்தது போல உள்ளது.

நான் +1 முடித்து, இடைநிலை ஆசிரியப் பயிற்சி முடித்துவிட்டு, சென்னையில் ஒரு பள்ளியில் மிகவும் சொற்ப சம்பளத்தில் பணி ஆற்றினேன்.திருமணம் ஆகிவிட்டதால், இருந்த வேலையையும் விட்டு விட்டுப் புலம் பெயர்ந்து வந்தாகிவிட்டது.

1975 முதல் 1984 அக்டொப‌ர் மாதம் வரை சும்மா வீட்டுக் குடித்தனம் தான். சமையல் சாப்பாடு,வராந்திர மாதாந்திர பத்திரிகை வாசிப்பு(தொலைக்காட்சி பரவாத சமயம்; எனவே சீரியல் கிடையாது;அதனால் பத்திரிகை படிக்கும் வழக்கம் உண்டு) கணவருக்கு எடுபிடி வேலை, வீடு தோட்டம் பராமரிப்பு, சமயத்தில் தோபி வேலை, சுகாதாரப்பணியாளர் வேலை என்று ஒரு நடுத்தரக் குடும்ப மனையாட்டியாகவே மாறிவிட்டேன். வாழ்க்கையில் எந்த'சேலஞ்சு'ம் இல்லை.அப்படியேதான் இறுதிவரை இருக்கும் என்றே எண்ணியிருந்தேன்.
ஆனால் காலம் என்னை மாற்றிவிட்டது.

1976,1979,1982 ஆகிய மூன்று வருடங்களில் பிரசவம் நடந்து மூன்று பெண் குழ‌ந்தைகளுக்குத் தாய் ஆனேன்.அவர்களுடைய வளர்ப்பு, படிப்பு என்று நேரம்
பற்றவில்லை.

1977 ஜூன் 6ந்தேதி தனிக்குடித்தனம் போனோம்.இதன் நடுவில் 1977 ஜனவரி 26 அனறு என் பெரிய மைத்துனர் மறைவு.1980ல் அந்த பெரிய ஓர்படியாரும் மறைவு. அவர்களுடைய 3 குழந்தைகளுக்கும் பொறுப்பு என்று பலசூழல்கள்.

அந்தக் காலகட்டத்தில் பல குழப்பங்கள் ஏற்பட்டாலும், இரண்டு ஆக்கங்கள் நிகழ்ந்தன.

நாங்கள் குடிபோன கட்டிய வீட்டைக் கிரயம் பேசி வாங்கி விட்டோம். அந்த வீட்டிலேயே 1977 முதல் 2011 வரை இருந்தோம். 1997ல் மாடியைக் கட்டினோம்.

இரண்டாவது ஆக்கம் நான் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் இடைநிலை ஆசிரியைஆக 14 அக்டோபெர் 1984ல் பணி நியமன உத்திரவு பெற்றேன்.
1 ஏப்ரில் 2010வரை பணி செய்து ஓய்வு பெற்றேன்.

வேலைக்குப் போனதால் என் 3 பெண்களையும் நன்கு படிக்க வைக்கவும், திருமணம் செய்யவும் ஏதுவாகியது.

வேலையில் சேர்ந்த பின்னர் +2 முடித்து, பி எஸ்ஸி முடித்து, பி எட் முடித்து
எம் எட் முடித்துப் பட்டம் பெற்றேன். அந்தத் தேர்வுகள் எழுதும் சமயம் என் வீட்டுக் கட‌மையோ, பள்ளிக் கடமையோ எதுவும் குறைவு படாமல் பார்த்துக்கொண்டேன்.நான் படிக்கத் துவங்கு முன்னரே,

"படிக்கிறாய் என்பதால் உன்னுடைய தினசரி நடைமுறை எதுவும் மாறக்கூடாது.எல்லாக்கடமையையும் ஆற்றிக் கொண்டே அதற்கும் மேல் நேரம் ஒதுக்கிப் படிக்க முடிந்தால் படி.நாங்கள் ஒத்துழைக்கவில்லை என்று குறை சொல்லக்கூடாது."

என்று கணவரும் ,மாமியாரும் நிபந்தனை விதித்தார்கள். ஓரளவு யாருக்கும் எந்தத் தொந்திரவும் இல்லாமல் படித்து முடித்தேன். அந்தத் திருப்தி மனதுக்கு ஆறுதலாக உள்ளது.

இந்த வாழ்க்கையில் பல ஏற்றத் தாழ்வுகள். மகிழ்ச்சியும், சோகமும்.குணமும் கோபமும்; நல்லதும் கெட்டதும்;நட்பும் பகையும் என்ற இரட்டைகளைப் பார்த்தாயிற்று.

ஆனாலும் நாமும் ஏதோ சாதித்து இருக்கிறோம் என்ற உள்ள‌ நிறைவு உள்ளது.

எல்லாம் நம்மை ஆட்டுவிக்கும் 'அவனா'ல் அல்லவோ நடக்கிற்து.

அந்த ஆண்டவருக்கு நன்றி!








ஓம் ஸ்ரீகணேசாய நம:


நமது வலைப் பூவை பிள்ளையார் வணக்க‌த்துடன் துவங்குவோம்!

பிள்ளையார்ப்பட்டி என்றாலே செட்டிநாட்டுக் கோவிலையே எல்லோரும் அறிவோம்.ஆனால் தஞ்சையை அடுத்து ஒரு பிள்ளையார்ப்பட்டி உள்ளது.

அங்குள்ள பிள்ளையார் பெரிய திருமேனி.ஓர் ஐந்தரை அடி உள்ள‌ நபர் பிள்ளையார் பின்னால் நின்று கைகளைத் தூக்கினால் அந்த நபரின் உருவம் தெரியாது. அந்த அளவு உருவம் பெரியது.

பெரியகோவில் நந்திக்கு இணையாக வைக்க இந்தப் பிள்ளையார் எடுத்துச் செல்லப்பட்டதாகவும், வழியில் அச்சு முறிந்து சாலையிலேயே அமர்ந்து விட்டதாகவும், பின்னர் அங்கிருந்து நகர்த்த‌ முடியவில்லை என்றும் அதனால் சாலை மீதே சிறிய கோவில் அமைக்கப்பட்டதாகவும் செவி வழிச்செய்தி கூறுகிறது.சாலை மீது கோவில் இருப்பதை உணர முடிகிற்து.ஏனெனில் அந்த இடத்தில் சாலை நனகு வளைந்து போகிறது.நாம் கேட்கும் செய்தி உண்மையானால் கோவில் 1000 வருடப் பாரம்பரியம் உள்ளதாகும்.

சிலை செய்யும் போதே பாரதம் எழுத முறிந்த கொம்பு விநாயகர் கையில் உள்ளது போல முறையாகச் செய்யப்பட்டுள்ளது.ஆனால் நன்கு இருக்க வேண்டிய மற்றொரு கொம்பும் முறிந்த நிலையில் காண்கிறது.இது சமீபகாலத்தில் அபிஷேகம் செய்யும் போது குடம் விழுந்து முறிந்துவிட்டதாம். அதன் பின்னர் நீண்ட காலம் பின்னம் அடைந்த விக்ரஹம் என்று பயந்து வழிபாடே நின்று போய் உள்ளது.

சமீபமாக கும்பாபிஷேகம் ஆகி, முன் மண்டபம் எல்லாம் கட்டப்பட்டு அழகுற‌ விளங்குகிறது கோவில்.

தஞ்சை=வல்லம் சாலையில் மருத்துவக்கல்லுரி,தென்னகப்பண்பாட்டு மையம் தாண்டியவுடன்,வல்லம் வருமுன்னரே சாலையின் மீதே உள்ளது இக்கோவில்.
முடிந்தால் ஒருமுறை தரிசியுங்கள்.

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்திமகன் தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே!

வித்தக விநாயக விரைகழல் சரணே!!!!!