Monday 9 May 2011

ஆபியம், கிட்டிப்புல், பம்பரம் போயாச்சு;


"ஆபியம், கிட்டிப்புல், பம்பரம் போயாச்சு;
ஹாபியாய் வீடியோ கேமாச்சு; -ஹேப்பியாய்
குந்தி விளையாடும் கேம்ஸின் அடிமைகளாய்
சந்ததிகள் ஆயிடுச்சே தான்!"
(www.thinnai.com)

மேலே கண்டுள்ளது அகரம்.அமுதாவின் ஒரு வெண்பா. இதுபோல நிறையத் தந்து இருக்கிறார். திண்ணை இணைய தளத்தில் காணலாம்.

இந்த வெண்பா படிக்க நகைச்சுவை போல் தோன்றினாலும் மிகவும் முக்கியமான ஒரு செய்தியைச் சொல்லுகிறது.என்னை சிந்திக்கத் தூண்டியது.உங்க‌ளையும் தூண்டும் என்றே நினைத்து எழுதத் துணிந்தேன்.

நமது சமூகத்திற்கே உரிய விளையாட்டுக்கள் எல்லாம் மறைந்துவிட்டன.

இதில் ஆபியம் என்பது பச்சைக் குதிரை தாண்டுத‌ல். அதாவது ஒருவனை குனியவைத்து அவன் முதுகில் கை ஊன்றித் தாண்டுதல். சோழநாட்டில் ஆபியம் என்பார்களாம்.அதற்கு ஒரு சுவாரஸ்யமான‌ பாட்டு:

"ஆபியம்...
மனியாபியம்...
இஷ்ட்டாபியம்...
குரங்காபியம்... 
நகரத்தின் எல்லைக் கோடு...
குட்டிச் சாத்தான் மண்ணைத் தின்றான்...
தற... தற... *த்துல உதை!"  

அந்தப் பாட்டில் இன்னொரு வகை:

"ஆபியம்
இஸ்டாபியம்
ல்க்டுதட்பரிசு
லாம்லாத்பரிசு
சோடா கலர்
உடைச்சி தாரேன் குடிச்சுக்க..."

(நன்றி:http://www.kudukuduppai.blogspot.com)

கிட்டிப்புல்,அல்லது கில்லி தாண்டல் என்பது நம் ஊர் கிரிக்கெட்! அதில் கில்லி விழுந்த இடத்திற்கு தாண்டலால் இத்தனை அளவு என்று கேட்க வேண்டும்.அப்படி அளக்கும் போது அதற்கும் பாடல் உண்டு. 

பம்பரம் விளயாட்டில், நல்ல வேகத்தில் பம்பரம் அசையாமல் சுற்றிக் கொண்டிருக்கும். அதற்குத் தூங்குதல் என்று பெயர்.அப்போதும் சில பாடல்கள் உண்டு.

பாண்டி விளையாட்டுக்கும் பாடல் உண்டு.

கோலிக் குண்டு விளையாட்டு குறிபார்த்து அடிக்க க‌ற்றுக் கொடுக்கும்.

சடுகுடு, அல்லது கபாடி பாட்டுப் பாடிதான் மூச்சடைத்து எதிர் அணியின் கோட்டைக்குள் நுழைய வேண்டும்.

தோற்றவன் முதுகில் உப்பு மூட்டை ஏறி சவாரி செய்யும் வாண்டுகள். 

இன்னும் எவ்வளவோ விளையாட்டுக்கள்.எல்லாம் போன இடம் தெரியவில்லை.

மைதானத்தில் சென்று ஓடியாடி விளையாடும் பழக்கம் எல்லாம் குழந்தைகளிடம் இல்லை.அருகிவிட்டது. எல்லோரும் கம்ப்யூட்டெர் விளையாட்டுக்களில் மூழ்கி, மற்ற பிள்ளைகளுடன் பழகவோ, பேசவோ, அறியாமல் போய் விட்டனர்.விளையாட்டுத் தோழன்/தோழி என்று சொல்ல இன்று குழந்தைகளூக்கு யாராவது உண்டா? 

வெளிப்புற விளையாட்டுக்களால் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல,மன ஆரோக்கியம், பிறருடனான உறவுகள் எல்லாம் பலமடையும்.

கிராமப்புறங்களிலும் கூட இலவசத் தொலைக் காட்சியில் அடிதடி படம் பார்க்க பிள்ளைகள் அமர்ந்து விடுகின்றன.

ஆரோக்கியம் கருதியாவது பிள்ளைகளை தினசரி மாலையில் நல்ல விளையாட்டுக்களில் ஈடுபடுதத வேண்டும். 

பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதற்காக இணைந்து பாடுபட வேண்டும்.

செய்வார்களா? 

9 comments:

  1. திருவையாற்றை அடுத்த திருநெய்த்தானத்தில் மரபு ஃபவுண்டேஷன் எனும் அமைப்பினை திருமதி ருக்மணி அம்மாள் நடத்தி வருகிறார். இவர் முன்னாள் இசைக்கல்லூரி முதல்வர் முனைவர் கெளசல்யா அவர்களின் தாயார். இந்த மரபு ஃபவுண்டேஷன் குழந்தைகளுக்கு பல்லாங்குழி, பாண்டி, கும்மி, கோலாட்டம் போன்ற ஆட்டங்களையும், பூத்தொடுத்தல், கோலம் போடுதல், ஊசி கொண்டு துணிகளைக் கையால் தைத்தல், சமையல் செய்தல் போன்றவைகளையும், அகராதியை எப்படிப் பார்ப்பது, ஆங்கில, தமிழ்ச் சொற்களை எப்படி சரியாக உச்சரிப்பது போன்றவைகளோடு, அரிய பாடல்கள் எடுத்துக்காட்டாக ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் வெளிவராத பாடல்கள், தமிழிசை மூவரின் அரிய பாடல்கள், தியாகராஜரின் சாஹித்தியங்கள், சமீபத்தில் சியாமா சாஸ்திரிகளின் சில அரிய ராகக் கீர்த்தனைகள் இவைகளுக்கு சங்கீதம் பயின்ற சிறுவர் சிறுமியருக்கு ஒருவாரம் தங்க இடம், உணவு கொடுத்து பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்கள். இம்மாதம் 15 தேதி முதல் வங்கிப் பணிகளைக் கையாள்வது, அஞ்சல் அலுவலகம் எப்படி இயங்குகிறது, கரன்சி என்பது என்ன அதை எந்த அளவுக்கு புழக்கத்தில் விடுகிறார்கள் இதுபோன்ற விவரங்களுக்கு ஒரு பயிற்சி வகுப்பு நடைபெறவிருக்கிறது. நமது மரபுகள் காக்கப்பட வேண்டுமென்பதில் இவர்களுக்கு அக்கறை. இதுபோல பல இடங்களிலும் செய்யலாமே!

    ReplyDelete
  2. உண்மைதான்

    ஓடிவிளையாடு பாப்பா!
    நீ, ஓய்ந்திருக்கலாகாது பாப்பா......

    காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு
    கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
    மாலை முழும் விளையாட்டு என்று
    வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா!....

    என்றான் மகாகவி....

    அறிவியல் பலம் கூடும் போது ஆன்ம பலம் குறைய வேண்டும் என்பது விதியாகிவிட்டது
    ஆன்ம பலம் பெற திரேக பலம் அவசியம்....

    இவை யாவும் நமது பழைய வாழ்வியலில் விளங்கியது... அனால் இப்போது உள்ள வாழ்வு ஒன்றுமே விளங்கவில்லை..

    "ஆவியம்
    மனியாவியம்
    இஷ்டாவியம்
    லாக்குதிரை
    லாக்குதிரை கொக்கு
    லாக்குதிரை மண்ணு
    எஷ்சார் இடி / உதை / ஆ, டுபுக்கு......

    இது நான் சிறுவயதில் பாடிய பாட்டு..
    இதிலே குனிந்து இருக்கும் சிறுவனின் தலையில் கால் படாமல் தாவ வேண்டும்....
    அப்படித் தாவும் போது மேலே பாடும் பாடலின் வரிசை மாறக் கூடாது...
    அதிலும் லாக்குதிரை கொக்கு என்றுக் கூறியவுடன் தனது இரண்டு கைகளையும் கொண்டு தலையில் கொம்பு " " உள்ளது போல் செய்யவேண்டும்.... அதேபோல் லாக்குதிரை மண் என்றுக் கூறி தாண்டியவுடன் மண்ணையும் தொடவேண்டும்... இப்படி யாக விதியை ஏதாவது ஒன்றில் தவறவிட்டாலும்... அவர் தான் மீண்டும் குனியவேண்டும்.... இளமை நினைவுகளை தூண்டிவிட்டீர்கள்... இங்கே குழந்தைகள் நிறைய இருந்தால் சொல்லித் தரலாம்.... உலகம் மாறியது மட்டும் அல்ல சுருங்கியும் போயிற்று....

    கட்டுரை தரும் சிந்தனை அருமை... நன்றி சகோதிரி....

    ReplyDelete
  3. "இதுபோல பல இடங்களிலும் செய்யலாமே!"

    நல்ல யோசனை சார்! தகவலுக்கு நன்றி தஞ்சாவூரான் சார்!. முயல்வோம்.இந்தக் கல்வியாண்டில் இங்குள்ள பள்ளிகளைத் தொடர்பு கொள்வோம்

    ReplyDelete
  4. ///"இளமை நினைவுகளை தூண்டிவிட்டீர்கள்... "///

    ஆம்! நானும் இள‌மை நினைவுகளால் தூண்டப்பட்டே இப்பதிவை இட்டேன்.
    பாராட்டுக்களுக்கு நன்றி ஆலாசியம் சார்!

    ReplyDelete
  5. பாடித் திரிந்த பறவைகளே ..
    பசுமை நிறைந்த நினைவுகளே ..

    நாம் பிரிந்து செல்கின்றோம் .. நாம் பிரிந்து செல்கின்றோம்..

    வரவுகள் இன்றி செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே ?

    அந்த நாள் ஞாபம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே ..

    நன்றி .. எங்களையும் இளமையாக்கியமைக்கு..

    ReplyDelete
  6. நன்றி ஜானகிராமன் சார்.இந்த பாரம்பரிய விளையாட்டுக்களை மீட்டு எடுக்க முயற்சி செய்வோம்.

    "ஒரு கொடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்ததாம்;ரெண்டு கொடம் தண்ணி ஊத்தி
    ரெண்டே பூ பூத்ததாம்..." என்று ஒரு விளையாட்டு.இரண்டு பெண்கள் கை கோர்த்து மேலே உயர்த்திப் பிடிக்க,அந்தக் கைகளுக்குக் கீழே மற்ற பெண்கள் புகுந்து போக வேண்டும்.அப்போது ஒரு பெண்ணை பிடித்து சிறை ஆக்குவார்கள்.

    "வீட்டுக்குப்போகணும் விடுடா துருக்கா
    விட மாட்டேன் பலுக்கா" என்று பாட்டு தொடரும்.

    எல்லாம் "பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்லப்போனதுவே"....

    ReplyDelete
  7. சிவயசிவ ஆசிரியர் சிவ.சி.மா.ஜானகிராமன் ஐயா அவர்கள் சொன்னதால் உங்கள் தளத்தைப் பார்த்தோம்.நம் மரபுகள் காக்கப்பட வேண்டும் என்ற உங்கள் ஆர்வமும் அதை செயல்படுத்தி வருவதாக தஞ்சாவூரான் சொன்ன செய்திகளும் மனதிற்கு மகிழ்வைத் தருகின்றன.குழந்தை வயதில் பால்வேறுபாடு இன்றி ஒரு குடம் தண்ணி ஊத்தி பாடல் பாடி விளையாடியதும் பூப்பறிக்க வருகிறோம் என்று பாடி விளையாடிய நினைவும் வந்தது.தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  8. GANGA SAID
    ----------

    சிவயசிவ ஆசிரியர் சிவ.சி.மா.ஜானகிராமன் ஐயா அவர்கள் சொன்னதால் உங்கள் தளத்தைப் பார்த்தோம்.நம் மரபுகள் காக்கப்பட வேண்டும் என்ற உங்கள் ஆர்வமும் அதை செயல்படுத்தி வருவதாக தஞ்சாவூரான் சொன்ன செய்திகளும் மனதிற்கு மகிழ்வைத் தருகின்றன.குழந்தை வயதில் பால்வேறுபாடு இன்றி ஒரு குடம் தண்ணி ஊத்தி பாடல் பாடி விளையாடியதும் பூப்பறிக்க வருகிறோம் என்று பாடி விளையாடிய நினைவும் வந்தது.தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  9. ஆம்!கங்காதரன் ஐயா!
    பூப்பரிக்க வருகிறோம் என்ற விளையாட்டில் கபடிபோல அணி பிரிந்து பூவின் பெயர்கள் சூட்டிக் கொள்ள் வேண்டும்."எந்தப் பூ வேண்டும்" என்றவுடன் எதிர் அணி ஒரு பூவின் பெயரைக் கூப்பிடும். அந்தப்பூவின் பெயார் சூட்டப்பட்டவர் எதிர் அணியினரைத் தொடவருதலும் அவர்கள் பிடிபடாமல் ஓடுவதும்...

    நல்ல நினைவுகள்! நன்றி!

    ReplyDelete