Wednesday 25 May 2011

ஆனந்த ஆஸ்ரமம்


கேரளாவில் கஞ்சன்காட் என்ற இடத்தில் ஆனந்த ஆஸ்ரமம் இருக்கிறது. இதனை நிறுவியவர் சுவாமி ராமதாஸ் அவர்கள்.

1884ல் பிறந்த சுவாமி ராமதாஸ் திருவண்ணாமலையில் ஸ்ரீரமண மஹரிஷியைத் தரிசித்து, ஒரு குகையில் 21 நாள் தவம் செய்து, தன்னைத்தான் உணர்ந்தவர். அதுவரை ஊரெல்லாம் சுற்றி வந்தவர் கஞ்சன்காட்டில் அமைதியாக வாழ்ந்தார். அவருடைய சீடர்களில் முதன்மையானவர் தவத்திரு கிருஷ்ணாபாய் அம்மையார்.

கிருஷ்ணாபாய் அம்மையார் அன்பே உருவானவர். அவருக்கு யாரையும் கடிந்து பேசத் தெரியாது.உலகியலே தெரியாது. பிறர் துன்பம் காணப் பொறாதவர்.

ஒரு சமயம் ஆஸ்ரமப் பணியாளர் ஒருவர் சோக முகத்துடன் விளங்குவதைக் கண்டார் அம்மையார்.

அந்தப் பணியாளரை அழைத்து "உங்களுக்கு என்னப்பா சோகம்?" என்று வினவினார்.

"அம்மா! வருமானம் போதவில்லை. குடும்பம் பெரிதாகிவிட்டது. கடன் கொடுத்தவர்கள் நச்சரிப்புத் தாங்க‌வில்லை..."

"அப்படியா அப்பா!குடும்ப வருமானம் வளர என்ன‌ வழி என்று யோசித்தீர்களா?"

"ஆம், தாயே! ஒரு பால் மாடு இருந்தால் பால் கறந்து விற்றுக் கடனை அடைத்துவிடுவேன்"

"சரி ஆசிரமக் கொட்டிலில் இருந்து ஒரு நல்ல பால் பசுவை ஓட்டிச் செல்லலாமே"

மகிழ்ந்த பணியாளர் மாடு கன்றைத் தன் இல்லத்திற்கு ஓட்டிச்சென்று விட்டார்.

மறு நாளும் பணியாள் முகத்தில் மகிழ்ச்சியில்லை. வழக்கம் போல அன்னை விசாரித்தார்.

"மாடும் கன்றும் மழை காற்றுக்கு ஒதுங்க முடியாமலும் வெய்யிலில் காய்ந்து கொண்டும் நிற்கின்றன"

"சரி. வேண்டிய மூங்கிலும், தென்னை ஓலையும் எடுத்துச் சென்று கூரை அமைக்கலாமே" என்றார் அன்னையார்.

அப்படியே செய்தார் பணியாளர்.

மீண்டும் பணியாளர் முகத்தில் வாட்ட‌ம்.

"ஏன் வாட்டமாய் இருக்கிறீர்கள்?"என்று அம்மையார் கேட்டார்.

"வைக்கோலும் பருத்திக்கொட்டை தீவனம் வாங்கக் காசுக்கு எங்கே போவேன்?"  என்றார் பணியாளர்.

"சரி, நமது கோசாலையில் இருந்து வைக்கோலும், தீவனமும் எடுத்துச்சென்று
மாட்டுக்குப் போடும்" என்றார் அன்னை.

மகிழ்ச்சியுடன் பணியாளர் எடுத்துச் சென்றார்.

மறுநாளும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார் பணியாளர்.

காரணம் கேட்ட அன்னையிடம் கூறுவார்." பாலை சந்தைக்குக் கொண்டு சென்றால் குறைந்த விலைக்குக் கேட்கிறார்கள்".

"அப்படியா? அந்த மாட்டுப் பாலை ஆஸ்ரமத்திற்கே விலைக்குக் கொடும்"'.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சீடர் ஒருவர் அன்னையைக் கேட்டார்.
"இப்படி எல்லாவற்றையும் கொடுத்துப் பின்னர் காசு கொடுத்துப் பால்
வாங்குவதற்கு பதில் நேர‌டியாகவே இந்தப் பணத்தை கொடுத்து உதவியிருக்கலாமே!"

அன்னை அன்புடன் கூறினார்:

"நீங்கள் சொல்வது போல் செய்திருந்தால் நமக்கு அக்ங்காரம் வந்திருக்கும். அவருக்குத் தாழ்வுணர்ச்சி வந்திருக்கும்.அவருக்குத் தானே சம்பாத்தித்துக் கடனை அடைத்தோம் என்ற திருப்தி வரவேண்டும்.எனவே தான் அப்படிச் செய்தேன்"

மகான்களின் உள்ளம் எப்படி செயல் படும் என்பது நமக்கு எப்படித் தெரியும்?

வாழ்க பப்பா ராமதாஸ்ஜி நாமம்!  வாழ்க அன்னை கிருஷ்ணாபாய்!  

5 comments:

  1. அருமையான செய்தி...

    இதில் ஒரு அருமையான கருத்தை தந்திருக்கிறீர்கள்..
    மனிதனது ஆசைக்கு முடிவே இல்லை என்பது
    இந்த கட்டுரையை படிக்குமபோது புரிகிறது..

    ஆனாலும் ஆண்டவனும் சரி
    அருளாளர்களும் சரி

    நாம எவ்ளோ ஆசைப்பட்டாலும் இல்லேன்னு சொல்லாம தர்றாங்க பாருங்க...

    THEY ARE GREAT..

    ReplyDelete
  2. நல்ல கருத்து.ஒருவனுக்கு ஒரு பொருளை தானம் செய்வதை விட அதை அவனே சுய முயற்சியால் பெற்றுக்கொள்ள உதவுவதே சிறந்தது என்ற கருத்தை வாழ்ந்து காட்டி சொல்லிய அம்மையாரின் வரலாற்றை எங்களுக்கு வழங்கியமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. வலைப் பூ ஆசிரியருக்கு வணக்கம்.

    அடுத்த படைப்பைப் படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  4. வணக்கம் மாமி + ஐயா,

    தங்களது இலண்டன் பயண ஏற்பாடுகளில் பிசியாக இருப்பீர்கள் போல,

    ரொம்ப நாள் ஆச்சில்லே.. ஒரு ஆக்கத்தை கொடுங்க..

    நன்றி..

    ReplyDelete
  5. என்ன உங்கள் வலைப்பூ ஆனந்த ஆசிரமத்தோடு நின்றுவிட்டது? அடுத்ததை வெளியிடுங்கள். படிக்கக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete